திருமணமான 2½ மாதத்தில் புதுப்பெண் 8 மாத கர்ப்பம்; கணவர் அதிர்ச்சி

புதுப்பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணம் அவரது தாய்மாமன் என்பது தெரியவந்தது.
கடலூர்,
குறிஞ்சிப்பாடி அருகே திருமணமான 2½ மாதத்தில் புதுப்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்து கணவர் அதிர்ச்சி அடைந்தார். கர்ப்பத்துக்கு காரணமான பெண்ணின் தாய்மாமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 18 வயது இளம் பெண்ணுக்கும், வைலாமுர் கிராமத்தை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் புதுப்பெண் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதை அடுத்து அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கணவர் அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதை செய்த டாக்டர்கள், புதுப்பெண் 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர், தனது மனைவியின் கர்ப்பத்துக்கு காரணமானவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நெய்வேலி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் புதுப்பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணம் அவரது தாய்மாமன் என்பது தெரியவந்தது.
அதாவது புதுப்பெண்ணின் தாய் மாமன் லிங்கமுத்து(32) என்பவருக்கு அடிக்கடி வலிப்பு வரும் என்பதால் அவர் தனது அக்காள் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது அவர் தனது அக்காள் மகளான புதுப்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்ததும், இதனால் அவர் கர்ப்பம் அடைந்ததும் தொியவந்தது. இதையடுத்து லிங்கமுத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். லிங்கமுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நெய்வேலி பகுதியில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






