நிர்மலா சீதாராமன் இன்று கரூர் செல்கிறார்

கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர்.
கரூர்,
கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து அரசியல் கட்சி தலைவர்கள் உடல்நலம் விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கரூர் செல்கிறார். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று பார்க்கிறார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் எல். முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் உடன் செல்கிறார்கள்.






