கரூர் சம்பவம்; விஜய் மீது தவறு இல்லை- இறந்தவர்களின் குடும்பத்தினர் பேட்டி

என்ன உதவி வேண்டுமானாலும் செய்வேன் என்று விஜய் உறுதி அளித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
கரூர்,
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி நடந்த த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று விஜய் அறிவித்து இருந்தார்.அதன்படி அந்த குடும்பத்தினரின் வங்கி கணக்கில் நேற்று இந்த உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு உள்ளது. அதில் சில குடும்பத்தினர் கண்ணீர்மல்க வேதனையுடன் பேட்டி அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-
இந்த சம்பவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவர் என்ஜினீயர் ரவி கிருஷ்ணன் (வயது 32). இதுதொடர்பாக ரவி கிருஷ்ணனின் தாய்மாமா ராமகிருஷ்ணன் கூறியதாவது:-நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். விஜய் நல்லவர் தான். ஆனால் எங்களது இழப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும். ரவி கிருஷ்ணனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (சம்பவம் நடந்த தினத்திற்கு மறுநாள்) மோதிரம் மாற்றுவதாக இருந்தது. அவன் உயிரோடு இல்லாததால் எங்கள் கனவு தகர்ந்துவிட்டது. இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.இவ்வாறு அவர் வேதனையுடன் கூறினார்.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள் மனைவி செல்வராணி கூறியதாவது:-எனது மகள்கள் பழனியம்மாள், கோகிலா ஆகிய 2 பேரும் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துவிட்டனர். விஜய் மக்களை சந்தித்து பேச வந்தார். இதில் அவர் மீது எந்த தவறும் இல்லை. கரூரில் கூடிய கூட்டம் யாரும் எதிர்பார்க்காத கூட்டம். அரசுக்கு நாங்கள் கூறுவது, விஜய்யின் பிரசாரத்திற்கு உரிய இடத்தை வழங்க வேண்டும்.கரூரில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. கரூரில் பாதுகாப்பு குறைவாக இருந்தது என்பதைவிட, பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. யார் எவ்வளவு தொகை கொடுத்தாலும், என் குழந்தைகளுக்கு ஈடாக வராது. 41 குடும்பத்தை தத்தெடுப்பதாக விஜய் அறிவித்து உள்ளார். எங்களிடம் வீடியோ காலில் பேசும்போது, கண்ணீர்விட்டு அழுதார். எங்களை சந்திக்க நேரில் வருவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த ஜெயாவின் (55) உறவினர் மகேஷ் கூறியதாவது:-விஜய் அறிவித்தபடி நிவாரண தொகையை வழங்கி விட்டார். ஏற்கனவே விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறினார். அப்போது ‘ஜெயாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது தான். இருப்பினும் உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு அரணாக இருப்பேன்’ என்று அவர் கூறியது எங்களுக்கு மிகவும் நம்பிக்கையாக இருந்தது. என்ன உதவி வேண்டுமானாலும் செய்வேன் என்று அவர் உறுதி அளித்துள்ளார். அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார். மற்றபடி இதில் யாரையும் குறை சொல்ல முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.






