‘தமிழகத்தில் அ.ம.மு.க.வை தவிர்த்துவிட்டு எந்தவொரு ஆட்சியும் அமைய முடியாது’ - டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க. இடம்பெறும் கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தமிழ்நாட்டில் உள்ள கூட்டணிகளுக்கு தலைமை தாங்கும் கட்சிகள் எங்களை அணுகி கூட்டணி தொடர்பாக பேசி வருவது உண்மைதான். கூட்டணி குறித்து எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் எடுத்த பிறகு, அது குறித்த அறிவிப்பை வெளியிடுவோம்.
அ.ம.மு.க. எத்தனையோ சோதனைகளை தாண்டி இன்று தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கிறது. தமிழகத்தில் அ.ம.மு.க.வை தவிர்த்துவிட்டு எந்தவொரு ஆட்சியும் அமைய முடியாது. எங்கள் தொண்டர்கள், நிர்வாகிகளின் உழைப்பால் இந்த இயக்கம் இன்று இந்த அளவு வளர்ந்திருக்கிறது.
எனவே, அ.ம.மு.க. இடம்பெறும் கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும். இதை நான் அதீத நம்பிக்கையில் சொல்லவில்லை. எனது 30 ஆண்டுகால நேரடி அரசியல் அனுபவம் மூலமாகவும், அ.ம.மு.க. தோற்றுவிக்கப்பட்ட பிறகு தேர்தல்களில் நாங்கள் பெற்ற வெற்றிகளின் மூலமாகவும், எங்களுடன் உண்மையாக நிற்கும் தொண்டர்கள் மீது இருக்கும் நம்பிக்கை மூலமாகவும் இதை நான் கூறுகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






