வடகிழக்குப் பருவமழை: முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பாக மேயர் பிரியா தலைமையில் ஆய்வுக் கூட்டம்

அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மேயர் பிரியா கூறியுள்ளார்.
மேயர் பிரியா தலைமையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக சேவைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக, சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னை மாநகர காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தமிழ்நாடு மீன்வளத்துறை, ஆவின், தென்னக ரெயில்வே துறை, மாநகரப் போக்குவரத்துக் கழகம், உணவுத் துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட தொடர்புடைய சேவைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (17.10.2025) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மேயர் பேசும்போது தெரிவித்ததாவது:-
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து துரிதமாக மேற்கொள்ள வேண்டும். மழைக்காலத்திற்கான நிவாரண மையங்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். உணவு தயாரிக்கும் கூடங்கள் அனைத்தையும் அலுவலர்கள் ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்திட வேண்டும். மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் மண் சேகரிப்புத் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாகவும் இப்பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்ட இடங்களில் தனிக்கவனம் செலுத்தி மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியில் கால்வாய்களில் தூர்வாருதல், தடுப்புச்சுவர் அமைத்தல், தடுப்புச்சுவரை உயர்த்திக் கட்டுதல், சுவர் மேல்பகுதியில் கம்பிவேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கால்வாய்களில் மழைநீர் தடையின்றி செல்வதை உறுதி செய்திட வேண்டும். மழைக்காலங்களில் பணிகள் நடைபெறும் இடங்களில் உரிய தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு உணவுப் பொருள் தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆவின் பால் விநியோகம் தடையின்றி மக்களுக்கு கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின் இணைப்புப் பெட்டிகள் அமைந்துள்ள இடங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்திட வேண்டும்.
மழைக்காலங்களில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு உரிய உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்திட வேண்டும். ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணிகளைத் தொடர்ந்து விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
தற்போது ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையில் 150 இணைப்புகளுடன் 1913 உதவி எண் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு சுழற்சி முறையிலும் தலா 60 நபர்கள் வீதம் 3 சுழற்சி முறைகளில் 180 நபர்கள் பணிபுரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வரப்பெறும் புகார்களை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள 25 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களின் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டார அலுவலகங்களில் தலா ஒரு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் என 3 வட்டார ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சி, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் சீரமைப்புப் பணிகள், புதிய குளங்கள் அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு அதிகளவில் நீர் சேமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என மேயர் அறிவுறுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






