செவிலியர்கள் தொடர் போராட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்


செவிலியர்கள் தொடர் போராட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
x
தினத்தந்தி 21 Dec 2025 1:51 PM IST (Updated: 21 Dec 2025 6:08 PM IST)
t-max-icont-min-icon

போராட்ட குழுவினரின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

ஒப்பந்த செவிலியர்களின் தொடர் போராட்டம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

போராட்டம் நடத்துவது அவர்கள் உரிமை. ஆனால் முன்னறிவிப்பு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுவது சரியானதல்ல. ஏனெனில் இது மக்கள் உயிர் சார்ந்த பணி என்பதை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும், அவர்களை தூண்டி விடுபவர்களும் உணர வேண்டும். ஒப்பந்த நர்சுகளை பொறுத்தவரை 2014-ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள்.

அவர்களை பணி அமர்த்திய போதே 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அதன்பிறகு காலி பணியிடங்கள் உருவாகும்போது சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற விதியையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதை ஏற்றுதான் பணியிலும் சேர்ந்துள்ளார்கள். ஆனால் நான்கைந்து ஆண்டுகள் யாரையும் பணி நிரந்தரம் செய்யாமல்விட்டு விட்டார்கள்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு பொறுப்புக்கு வந்த பிறகுதான் ஆண்டு தோறும் உருவாகும், காலி பணியிடங்கள் உடனுக்குடன் விதிப்படி நிரப்பப்பட்டு வருகிறது. இதுவரை 3 ஆயிரத்து 783 நர்சுகள் பணி நிரந்தம் செய்யப்பட்டு உள்ளார்கள். நாளை மறுநாள் (செவ்வாய்) 169 பேருக்கு பணி நிரந்தர ஆணை வழங்க இருக்கிறேன்.

போராட்ட குழுவினரின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம். ஆனால் அவர்கள் தரப்பில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்கிறார்கள். புதிய வேலை வாய்ப்புகள் என்பது மருத்துவத்துறையின் கட்டமைப்புகள், மருத்துவ பயனாளிகளின் எண்ணிக்கை, நிதி ஆதாரம் உள்ளிட்ட அம்சங்களை ஆராய்ந்து அரசு எடுக்கும் கொள்கை முடிவு சார்ந்தது.

மருத்துவத் துறையில் 18 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு 35 ஆயிரம் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள். 45 ஆயிரம் பேருக்கு கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு வெளிப்படை தன்மையாக நிர்வாகம் நடந்து வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முன்னதாக நேரில் சந்தித்து பேசி இருக்கலாம். அவர்களும் துறையின் அங்கத்தினர்கள் தான் தேர்தல் நேரத்தில் யாரோ தூண்டி விடுகிறார்கள். உண்மை நிலையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story