18 நாட்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவைகள் இன்று மாலை முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 நாட்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
Published on

சென்னை,

அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்,

07.11.2025-தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி ஆம்னி பேருந்துகளை கேரளா போக்குவரத்து துறையினரால் சிறைபிடிக்கப்பட்டு 70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று கர்நாடகா போக்குவரத்து துறையும் 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தடுத்து, ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதித்து, மொத்தம் ரூ.1.15 கோடி வரை வசூலித்துள்ளது. இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம் 2021 மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மீட்டின்படி தமிழகத்தில் இன்று வரை அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கிறார்கள் எனவே நாங்களும் வசூலிக்கிறோம் என தெரிவிக்கிறார்கள்.

இந்நிகழ்வை தொடர்ந்து 07.11.2025 முதல் தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் 230 ஆம்னி பேருந்துகளை கடந்த 21 நாட்களாக இயக்காமல் நிறுத்தி நிறுத்தி வைத்திருந்தோம்.. கடந்த 10.11.2025 தேதியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகளும் இயக்காமல் கடந்த 18 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டிற்கு தமிழக சாலை வரி ரூபாய்.1,50,000.00 , AITP சாலை வரி ரூபாய்.90,000.00 மற்றும் கேரளா அல்லது கர்நாடகா சாலை வரி சுமாராக 2 லட்சம் ஆக மொத்தம் காலாண்டுக்கு ரூபாய். 4,50,000.00 செலுத்தி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தோம். இதுகுறித்து, 10.11.2025 அன்று போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களையும், 11.11.2025 அன்று போக்குவரத்து ஆணையர் அவர்களையும் சந்தித்து, கோரிக்கை வைத்தோம்.

மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் 1,350-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்ததால், தினசரி 25,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்படைந்து, உரிமையாளர்களுக்கு தினசரி சுமார் ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதால், கடந்த 21 நாட்களில் மொத்தம் ரூ.84 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்திருந்தனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் அவர்களுக்கும் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் போக்குவரத்து துறை ஆணையர் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தோம் ஆணையர் அவர்களும் அமைச்சர் அவர்களும் முதல்-அமைச்சர் அவர்களின் ஆலோசனை பெற்று நல்ல ஒரு முடிவை ஏற்படுத்தி தருகிறோம் என்று கூறியுள்ளனர். அரசு இதை பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில், பயணிகள் நலனையும், அய்யப்பன் கோவில் பக்தர்கள் நலனையும் கருத்தில் கொண்டு,

வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளை இயக்க உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, வெளி மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் இன்று (28.11.2025) மாலை முதல் வழக்கம்போல் இயக்கப்படும். பயணிகள் அனைவரும் முந்தையபோல தங்களது ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com