பொறியியல், கலை, அறிவியல் மற்றும் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான இணையவழி விண்ணப்பம் தொடக்கம்


பொறியியல், கலை, அறிவியல் மற்றும் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான இணையவழி விண்ணப்பம் தொடக்கம்
x

முனைவர் கோவி. செழியன் கல்லூரிகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவினை தொடங்கி வைத்தார்.

சென்னை,

இன்று (07.05.2025) சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் தமிழ்நாடு பொறியியல், கலை, அறிவியல் மற்றும் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை செயலாளர் சி. சமயமூர்த்தி, கல்லூரிக் கல்வி ஆணையர் எ. சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, தி. புருசோத்தமன், செயலாளர், தமிழ்நாடு பொறியியற் மாணாக்கர் சேர்க்கை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் உயர்கல்வியில் உன்னதமான இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்குத் திட்டங்களான 'நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், உயர்வுக்குப் படி' போன்ற மாணவர் நலத் திட்டங்களின் மூலம் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகின்றது. வளர்ந்து வரும் தொழில்துறை மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்கேற்ப தமிழ்நாடு அரசு, மாணாக்கர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பொறியியல் கல்லூரி

தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. பொறியியற் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்ள இணையதள வாயிலான விண்ணப்பப் பதிவு 07.05.2025 முதல் 06.06.2025 வரை நடைபெறும்.

இணையதள வாயிலான விண்ணப்பப் பதிவு முகவரி www.tneaonline.org

விண்ணப்பப் பதிவு கட்டணம் OC/BC/BCM/MBC&DNC பிரிவினர்க்கு ரூ.500/- ம், SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.250/- ம் ஆகும். இது தவிர, கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான முன் வைப்புத் தொகையோ அல்லது கலந்தாய்வுக் கட்டணமோ எதுவும் இல்லை

இணையதள வசதி இல்லாத மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் சென்ற ஆண்டைப் போலவே 110 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மாணாக்கர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டி பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம்

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அழைப்பு எண்: 1800-425-0110. மேலும், மாணாக்கர்கள் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் 11 அரசு பொறியியற் கல்லூரிகளில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல்), கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சைபர் பாதுகாப்பு), கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (தரவு அறிவியல்), பி.டெக் (தகவல் தொழில்நுட்பவியல்), பொறியியல் (மெக்கட்ரானிக்ஸ்), பொறியியல் (ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேசன்), மின்னணுப்பொறியியல் மற்றும் கருவியியல், மற்றும் தொழில்துறை உயிர் தொழில்நுட்பவியல் போன்ற 12 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக 720 மாணாக்கர்கள் பயன் பெறுவார்கள்.

இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்த அறிவிப்புகளின்படி, துரித நடவடிக்கை எடுத்து உடனே ஏ.ஐ.சி.டி.இ ஒப்புதல் பெற்று இந்த ஆண்டே மாணாக்கர் சேர்க்கை தொடங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தாமதமான மருத்துவக் கல்லூரி கலந்தாய்வின் காரணமாக அண்ணா பல்கலைக் கழகத்தில் ஏற்படும் காலியிடங்களை நிவர்த்தி செய்யும் விதமாக இந்த ஆண்டு கூடுதலாக அண்ணா பல்கலைக்கழகத்தில் 15 சதவீத மாணாக்கர் சேர்க்கை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையில் அதற்கு முந்தைய ஆண்டைவிட 12.63 சதவீதம் அதிகமாக மாணவர்கள் சேர்ந்தனர். நடப்பாண்டில் 720 இருக்கைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 2,42,951 மாணவர்கள் கலந்தாய்வின் மூலம் சேர்க்கை பெற வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி

தமிழ்நாட்டில் ஏற்கெனவே உள்ள 165 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பண்ருட்டியில் அறிவிக்கப்பட்ட புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியோடு, நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்போது மாண்புமிகு உயர்கல்விதுறை அமைச்சர் அவர்கள் குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, கொளக்காநத்தம், ஒட்டப்பிடாரம், முத்துப்பேட்டை, திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்குவதற்கான அறிவிப்பினை வெளியிட்டார். புதியதாக தொடங்கப்பட்டுள்ள மேற்கண்ட 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் சேர்த்து கடந்த ஆண்டினைவிட கூடுதலாக 18868 மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,25,345 சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணாக்கர்கள் தாங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டண விவரம்

விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு : ரூ.48/- பதிவுக் கட்டணம் : ரூ.2/- மட்டும் SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை பதிவுக் கட்டணம் : ரூ.2/- மட்டும்

www.tngasa.in இணையதளம் வழியாக விண்ணப்பம்

பதிவுசெய்யத் தொடங்கும் நாள் 07.05.2025

பதிவுசெய்ய இறுதி நாள் 27.05.2025

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை

செலுத்தும் முறை Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்.

மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்பான விவரங்களை www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும்

உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 வரை 044 – 24343106 / 24342911 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பலவகை தொழில்நுட்பக் கல்லூரி (Polytechnic)

பலவகை தொழில்நுட்ப கல்லூரியை பொறுத்தவரையில் இந்த ஆண்டு வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருவொற்றியூரில் ஒரு அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் மாணாக்கர் சேர்க்கை உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வளர்ந்து வரும் தொழில்துறை தேவையை கருத்தில்கொண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தீ தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு, சைபர்தொழில் நுட்பம் மற்றும் தகவல் பாதுகாப்பு, உணவுத் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு, மின்னணு உற்பத்தி தொழில்நுட்பவியல், பொதிகட்டுதல் தொழில்நுட்பம், நில எண்ணெய் வேதிப்பொறியியல் மற்றும் காலணி தொழில்நுட்பம் ஆகிய புதிய டிப்ளமோ பாடப் பிரிவுகள் வரும் கல்வி ஆண்டில் தொடங்கப்பட உள்ளன. இதன்மூலம் அரசு தொழில்நுட்பக் கல்லுரியில் கூடுதலாக 570 மாணக்கர்கள் பயன்பெறுவார்கள். மேலும் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களின் திறனை மேம்படுத்திக்கொள்ள அவர்கள் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டே பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் குறுகிய கால திறன்சார் பாடப் பிரிவுகளும் ஏற்படுத்தபட உள்ளன.

இந்த ஆண்டு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 100 சதவீத மாணாக்கர் சேர்க்கை நடைபெறுவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளிக் கல்வித்

துறையுடன் இணைந்து பத்தாம் வகுப்பு முடித்து இடைநின்ற மாணவர்கள், பதினொன்றாம் வகுப்பு முடித்து இடைநின்ற மாணவர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு இம்மாணவர்களை தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

தமிழகத்திலுள்ள 55 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில், 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான, முதலாமாண்டு நேரடி இரண்டாமாண்டு மற்றும் பகுதிநேரப் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கவும், சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யவும் https://www.tnpoly.in இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணாக்கர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சேவை மையங்கள் (TNEA Facilitation Centre) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் https://www.tnpoly.in இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

முதலாமாண்டு மற்றும் பகுதிநேர பட்டயப் படிப்பிற்கு, இணையதளம் வாயிலாக, விண்ணப்பத்தினை 07.05.2025 முதல் 23.05.2025 வரை பதிவு செய்யலாம்.

நேரடி இரண்டாமாண்டு பட்டயப் படிப்பிற்கு, இணையதளம் வாயிலாக, விண்ணப்பத்தினை 07.05.2025 முதல் 23.05.2025 வரை பதிவு செய்யலாம்.

கல்வித் தகுதி :

1. முதலாமாண்டு பட்டயச் சேர்க்கை (1st Year Diploma Course) பத்தாம்

வகுப்பு (SSLC / Matriculation) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி படிப்பிற்கான கால அளவு- 3 வருடங்கள்

2. நேரடி இரண்டாமாண்டு பட்டயச் சேர்கை (Lateral Entry Diploma Course)

பனிரெண்டாம் வகுப்பு (HSC) தேர்ச்சி (அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி

(அல்லது)

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றபின் 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 years ITI (in any branch of Engineering and Technology) after 10th std passed படிப்பிற்கான கால அளவு - 2 வருடங்கள்.

3. பகுதிநேர பட்டயச் சேர்க்கை (Part-Time Diploma Course) தகுதி: 10th /

10th + (2 years ITI) / 10th + (2 years Experience). படிப்பிற்கான கால அளவு - 4 வருடங்கள்

பதிவுக்கட்டணம் : பதிவுக் கட்டணமான ரூ.150/-ஐ விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking இணையதள வாயிலாக செலுத்தலாம். SC/ SCA / ST பிரிவினருக்கு பதிவுக் கட்டணம் இல்லை

அனைத்து தகவல்கள், வழிகாட்டி மற்றும் தொலைபேசி எண்கள் ஆகிய விவரங்களை, மாணாக்கர்கள் https://www.tnpoly.in இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியை பொறுத்தவரையில் மாணாக்கர் சேர்க்கை மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பு, ஆசிரியர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி, மாணவர்களுக்கான திறன் பயிற்சி போன்ற திட்டங்களை சிறப்பாக நடைபெறும் வகையில் எச்.எல்,மேன்டோ, ஆரோலேப், கவசவாகன தொழில் நிறுவனம் (AVNL), சி.டாக் (CDAC), பிரேக்ஸ் இண்டியா மற்றும் டாடா ஸ்ட்ரைவ் ஆகிய ஆறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 More update

Next Story