ஊட்டி: 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் மினி பஸ்; 32 பயணிகள் காயம்


ஊட்டி: 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் மினி பஸ்; 32 பயணிகள் காயம்
x

ஊட்டியில் மினி பஸ் விபத்தில் சிக்கியவர்களில் 17 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் அடங்குவர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து தனியார் நிறுவனத்தின் மினி பஸ் ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அந்த மினி பஸ் மணலடா பகுதியருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் பஸ் தலைகீழாக கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கி கொண்டனர். பலர் பலத்த காயமடைந்தனர். விபத்து பற்றி அறிந்ததும், அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் ஓடி சென்று அவர்களை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பஸ்சில் இருந்த பயணிகளில் மொத்தம் 32 பேருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவர்களில் 17 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் அடங்குவர்.

அவர்கள் அனைவரும் பலடா கிராம சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் பின்னர் உடனடியாக ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடம் என தகவல் தெரிவிக்கின்றது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story