போக்சோ வழக்கை முறையாக விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு


போக்சோ வழக்கை முறையாக விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
x

கோப்புப்படம் 

போக்சோ வழக்கை முறையாக விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு 15 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் தொழிலில் தள்ளியதாக சிறுமியின் தந்தை வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, முறையாக விசாரிக்காத அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுமி சார்பில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி விசாரணை நடத்திய புலன் விசாரணைப் பிரிவு தாக்கல் செய்த அறிக்கையில், 'வழக்கு தொடர்பான ஆவணங்கள் தாமதமாக நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியை தாமதமாக மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கியுள்ளனர். சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இறுதியாக வழக்கு முடித்து வைக்கப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி எஸ்.மணிக்குமார் மற்றும் உறுப்பினர் வி.கண்ணதாசன் அடங்கிய அமர்வு, "வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்க்கையில் விளையாடி உள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. மகளிர் போலீசார் சட்டப்படி தங்கள் கடமையை செய்யாமல் புறக்கணித்துள்ளதன் மூலம் மனித உரிமையை மீறியுள்ளனர்.

எனவே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 9 லட்சம் ரூபாய் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த தொகையை அப்போதைய ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த போக்சோ வழக்கை, டி.எஸ்.பி., அந்தஸ்து அதிகாரியை நியமித்து மீண்டும் விசாரணை செய்து 3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story