டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு - அமலாக்கத்துறை அறிக்கை


டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு - அமலாக்கத்துறை அறிக்கை
x
தினத்தந்தி 13 March 2025 7:30 PM IST (Updated: 13 March 2025 7:32 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்க வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை

டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டாஸ்மாக்கில் ஒரு மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது அம்பலமாகியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் மது விற்பனைக்காக டாஸ்மாக் ஊழியர்களுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கொள்முதல் எண்ணிக்கையை குறைத்து காட்டி ஊழல் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் மதுபான நிறுவனங்களிடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான அதாரம் சிக்கியுள்ளதாகவும், டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் அமலாக்கத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து நிறுவனங்களுக்கு டாஸ்மாக் ஆண்டுதோறும் ரூ.100 கோடி செலுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்க வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த முறைகேடு குற்றச்சாட்டுகளில் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய கூட்டாளிகளின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும், இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூத்த அதிகாரிகளுக்கு விரைவில் அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story