தங்கை மீது பெற்றோர் அதிக பாசம்... மனவேதனையில் 10-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

ஷாகித்யாவுக்கும் அவருடைய தங்கைக்கும் 7 வயது வித்தியாசம்.
கோவை,
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45). பார் உரிமையாளர். இவருடைய மூத்த மகள் ஷாகித்யா (வயது 15). இவர் 10-ம் வகுப்பு படித்து உள்ளார். மற்றொரு மகள் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். ஷாகித்யாவுக்கும் அவருடைய தங்கைக்கும் 7 வயது வித்தியாசம்.
இதனால் பெற்றோர், ஷாகித்யாவிடம் நீ பெரியவள் என்பதால், நீ தான் தங்கையை பார்த்துக்கொள்ள வேண்டும், அவளுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டும் என்று அடிக்கடி கூறியதாக தெரிகிறது. ஷாகித்யா, தன்னிடம் பெற்றோர் பாசம் காட்டுவது இல்லை என்றும், தங்கை மீது அதிகமாக பாசம் காட்டுவதாகவும் கருதி உள்ளார். இது குறித்து அவர், தனது பெற்றோரிடமும் அடிக்கடி கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று 2-வது மகள் தனது தாயிடம் மக்காச்சோளம் கேட்டு உள்ளாள். உடனே அவர் தனது மூத்த மகளிடம் தங்கைக்கு மக்காச்சோளம் செய்து கொடு என்று கூறி உள்ளார். உடனே அவரும் மக்காச்சோளத்தை எடுத்து அவித்து தங்கைக்கு கொடுத்து உள்ளார். இதற்கிடையே தங்கையிடம் அதிக பாசம் காட்டுகிறார்கள். தன்னிடம் பாசம் காட்டுவது இல்லை என்று கருதிய ஷாகித்யா மனவேதனையில் விரக்தி அடைந்தார்.
இதையடுத்து அவர், தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மூத்த மகள் தற்கொலை செய்துகொண்டதை பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர். சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் ஷாகித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






