அரசியல் கட்சி பொதுக் கூட்டங்களுக்கு முன்வைப்புத்தொகை செலுத்தும்படி கட்டாயப்படுத்தக் கூடாது - எஸ்டிபிஐ கட்சி

கோப்புப்படம்
பொதுக்கூட்டங்களில் விதிகளும், ஒழுங்கும் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக அரசு, சென்னை ஐகோர்ட்டின் பரிந்துரையின் அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ரோட் ஷோக்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை முன்மொழிந்துள்ளது. இதில், கூடும் மக்கள் எண்ணிக்கையைப் பொறுத்து 1 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், கூட்டங்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு அனுமதி கோர வேண்டும், கூட்டங்கள் 3 மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும், பங்கேற்பாளர்களுக்கு குடிநீர், கழிப்பறை ஏற்பாடு செய்ய வேண்டும், மேடைக்கு பொறியாளர் சான்றிதழ் பெற வேண்டும் போன்ற விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு கருத்துரிமை, பேச்சுரிமை மற்றும் ஒன்றுகூடும் உரிமை ஆகியவற்றை அடிப்படை உரிமைகளாக வழங்கியுள்ளது. இவை பிரிவு 19(1)-ன் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், மக்கள் பிரச்சினைகளுக்காக அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் பேரணி, பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு முன்வைப்புத் தொகை நிர்ணயிப்பது என்பது சிறிய மற்றும் எதிர்க்கட்சிகளின், மக்கள் நலன் விரும்பும் கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் உள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கூட்ட நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசு மற்றும் காவல்துறையின் கடமையாகும். அதற்காக வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அரசியல் கட்சிகள் அவற்றின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல பொதுக்கூட்டங்கள்தான் ஒரே வழியாகும். பல சிறிய கட்சிகள் நன்கொடை வசூலித்துத்தான் கூட்டங்களை நடத்துகின்றன. அவை வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டால், அக்கட்சிகளால் அதனை நிறைவேற்ற முடியாது.
ஐகோர்ட்டின் யோசனையாக இருந்தாலும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் கடமை கொண்ட அரசுக்கு இதுபோன்ற யோசனையை நிராகரிக்க அனைத்து அதிகாரங்களும் உண்டு. அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்காகச் சம்பந்தப்பட்ட கட்சிகளிடமிருந்து தண்டம் வசூலிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள நிலையில், கூட்டங்களுக்கு வைப்புத்தொகை செலுத்தும்படி கட்டாயப்படுத்தக் கூடாது.
அதோடு அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி 10 நாட்கள் முன்பாகவும், 15 நாட்களுக்கு மிகாமலும் மனு அளிக்க வேண்டும். மற்ற இடங்களுக்கு 21 நாட்கள் முன்பாகவும், 30 நாட்களுக்கு மிகாமலும் மனு அளிக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் ஏற்புடையதல்ல. ஏனெனில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு அவ்வப்போது போராட்டங்கள் மூலமாக தீர்வு கிடைக்க இந்த விதிமுறை முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்.
காவல்துறைக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் நோக்கிலான விதிமுறைகளாக இவை உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை பல்வேறு நெருக்கடிகளை அளித்துவரும் நிலையில், இந்தப் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டால் அது இன்னும் காவல்துறையின் நெருக்கடிக்கு ஆளாக்கும்.
ஆகவே, தமிழக அரசு இந்த கூட்டங்களுக்கான முன்வைப்புத்தொகை விதிமுறை, 15 நாட்களுக்கு மிகாமல் முன் அனுமதி மனு உள்ளிட்ட ஜனநாயக குரல்களை தடுக்கும் வகையிலான முன்மொழிவை கைவிட வேண்டும். மாறாக, பொதுக்கூட்டங்களில் விதிகளும், ஒழுங்கும், கட்டுப்பாடும் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும். மேலும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், மக்களுக்கும் உள்ளது என்பதை இதனூடாக உறுதிப்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து ஜனநாயக சக்திகளும் இத்தகையை முன்மொழிவை எதிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






