பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு: பஸ்-ரெயில் நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு ஊர்களுக்கும் சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன
நெல்லை:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடந்த 14-ம் தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கல் விடுமுறை நாட்கள் இன்றுடன் முடிவடைகின்றன. நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படுவதால், விடுமுறைக்காக குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு நேற்று முதலே வெளியூர்களுக்கு புறப்பட்டுச் செல்லத் தொடங்கியுள்ளனர்.நெல்லை மாவட்டத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் தாங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு நேற்று முதல் புறப்பட்டுச் சென்று வருகின்றனர். இன்றும் அதிகாலை முதலே ரெயில்களிலும் பஸ்களிலும் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதனால், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்தும், வழியாகவும் இயக்கப்பட்ட ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஏற்கனவே ரெயில்களில் இருக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில், புதிதாகவும் சிறப்பு ரெயில்கள் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டன. ஆனால் அவையும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.நேற்று அந்தியோதயா ரெயிலில் ஏற்கனவே பெரும்பாலான இருக்கைகள் நிரம்பியதால், நடைபாதை மற்றும் படிக்கட்டு அருகில் ஏராளமானவர்கள் அமர்ந்தும் நின்றும் பயணம் செய்தனர். இன்றும் காலையிலேயே வந்த ரெயில்களில் பயணிகள் முண்டியடித்துப் ஏறிச் சென்றனர். இன்று மாலை இயக்கப்படும் அந்தியோதயா ரெயிலில் இடம் பிடிக்கவும், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்கவும் காலை முதலே ரெயில் நிலையத்தில் பயணிகள் வரிசைபோட்டு காத்திருந்தனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் நெல்லையிலிருந்து சென்னை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு ஊர்களுக்கும் சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, திண்டுக்கல் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.






