கர்மவீரர் மண்ணை முன்னேற்றும் பிரதமர் மோடி அரசு - நயினார் நாகேந்திரன்

பி.எம்.மித்ரா ஜவுளிப்பூங்காவில் தொழிற்சாலைகளுக்கான நில ஒதுக்கீடு தொடங்கப்படவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
நமது பாரதப் பிரதமர் மோடியால் விருதுநகருக்கு வழங்கப்பட்ட பி.எம்.மித்ரா ஜவுளிப்பூங்காவில் தொழிற்சாலைகளுக்கான நில ஒதுக்கீடு தொடங்கப்படவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
சுமார் 1,052 ஏக்கரில் ரூ.1,894 கோடி மதிப்பீட்டில் நமது மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதன் மூலம், வெகு விரைவிலேயே விருதுநகரில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதை நினைக்கையிலேயே மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.
கர்மவீரர் பிறந்த மண்ணான விருதுநகரில் பி.எம்.மித்ரா அமைக்கக் கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை வாயிலாக ஒப்புதல் அளித்ததோடு, அதை மூன்றே மாதத்திற்குள் செயல்பாட்டிற்கும் கொண்டு வந்திருக்கிறது கர்மமே கண்ணாக இருக்கும் நமது பிரதமர் மோடி அரசு! தமிழக முன்னேற்றத்தில் நமது பிரதமர் மோடிக்கு உள்ள எல்லையில்லா அக்கறை பற்றி இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு வேண்டுமா என்ன!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






