தூத்துக்குடியில் தேர்தல் ஆணையம், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் குடிமக்களின் வாக்குரிமையை பறிப்பதை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்தம் என்ற பெயரில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்திய தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்தம் என்பதை கைவிட வேண்டும். வாக்காளர் பட்டியலில் திருத்தம் என்ற பெயரில் குடிமக்களின் வாக்குரிமையை பறிப்பதை கைவிட வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபடும் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய பாரதிய ஜனதா அரசைக் கண்டித்தும் தூத்துக்குடி, சிதம்பரம்நகர் பஜார் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து தலைமை வகித்தார். மத்திய குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சங்கரன் ஆகியோர் ேகாரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், ராஜா, புவிராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராகவன், சுரேஷ், ரவிசந்திரன், நம்பி, ரவிதாகூர், ஶ்ரீநாத், இனிதா, மாநகர குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், ஆனந்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






