புதுக்கோட்டை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வழக்கத்தை விட அதிகமாக ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல்,
இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தின் 10-ம் நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், 'தியாகத் திருநாள்' என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், கடந்த மாதம் 28-ந் தேதி வானில் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, பக்ரீத் பண்டிகை வருகிற ஜூன் 7-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகராட்சி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. மணப்பாறை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட10 முதல் 20 கிலோ எடையுள்ள ஆடுகளை, ஏராளமான இஸ்லாமியர்கள் உள்ளிட்டோர் வாங்கிச் சென்றனர்.
10 கிலோ கிடாய் ஆடு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை என விற்பனை ஆனது. மொத்தமாக அங்கு சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போல் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி வாரச்சந்தையில் ஒரே நாளில் 1 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகின. நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி, சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் சந்தையில் விற்பனைக்கு குவிந்த நிலையில் எடைக்கு ஏற்ப ஒரு ஆடு 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
அதே போன்று ஒரு கிடா ஆடு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. மேலும் வழக்கத்தை விட அதிகமாக ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






