புரட்டாசி மாதம் முடிந்தது: காசிமேடு சந்தையில் குவிந்த மீன் பிரியர்கள்

விடுமுறையையொட்டி காசிமேடு மீன் சந்தையில் மீன் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை,
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் சென்னையில் பெரும்பாலானவர்கள் விரதம் இருந்து, அசைவ உணவை தவிர்ப்பது வழக்கம். இதன்காரணமாக காசிமேடு மீன்பிடி சந்தையில் மீன் வியாபாரம் கடந்த சில வாரங்களாக வழக்கத்தைவிட குறைந்து இருந்தது. விசைப்படகு மீனவர்களும் குறைந்த அளவே கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
புரட்டாசி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான கடந்த வாரம் காசிமேடு மீன்பிடி சந்தையில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். குறைந்த அளவு விசைப்படகுகளே கரைக்கு திரும்பியதால் மீன்வரத்தும் குறைவாகவே இருந்தது. விலையும் சராசரியாகவே இருந்தது.
இந்த நிலையில், புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தீபாவளி பண்டிகை என்பதால் காசிமேடு மீன் சந்தையில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே மீன்கள் வாங்குவதற்காக காசிமேட்டில் குவிந்த மக்கள், தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர். வஞ்சிரம், வவ்வால், பால் சுறா, திருக்கை, பாறை, ஷீலா, சங்கரா உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் வரத்து கணிசமாக இருந்த நிலையில் மீன்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதனால் காசிமேடு மீன் சந்தை திருவிழா போல் காணப்பட்டது.
இதைபோல கடலூர் துறைமுகத்திலும் மீன்களை மக்கள் வாங்க குவிந்தனர். தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று மாலையில் அமாவாசை விரதமும் தொடங்குவதால் இன்றே ஏராளமான மக்கள் இறைச்சி வாங்க கடைகளில் குவிந்தனர். ஆட்டு இறைச்சி கிலோ ரூ.1,000-க்கும், கோழி இறைச்சி ரூ.280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






