நெல்லை, தூத்துக்குடியில் மழை: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு


நெல்லை, தூத்துக்குடியில் மழை: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
x

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாநகரிலும், புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு நேற்று 5-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்து தேயிலை தோட்டப்பகுதியில் 15 சென்டி மீட்டர்(151 மி.மீ) மழை பதிவாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை பரவலாக மழை தூறிக்கொண்டே இருந்தது. மதியம் சுமார் 12.30 மணி முதல் 1 மணி வரை திடீரென பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.

இதேபோல் தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, இலஞ்சி, மேலகரம், கடையம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் பலத்த மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க நேற்று காலை முதல் போலீசார் தடை விதித்தனர்.


Next Story