வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நாம் தமிழர் வேட்பாளர் பெயர் நீக்கம்: கலெக்டருடன் வாக்குவாதம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதில் நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் சிவகங்கை தொகுதி வேட்பாளராக இந்துஜா களமிறங்கியுள்ளார்.
இதனிடையே, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை 11ம் தேதிக்குள் நிறைவு செய்ய தேர்தல் ஆணையம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சிவகங்கை தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் இந்துஜாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்துஜாவின் கணவர் பெயரும் வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த இந்துஜா இன்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயரும், கணவர் பெயரும் நீக்கப்பட்டு, இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்துஜா குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக கலெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். இந்த சம்பவம் கலெக்டர் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.






