கர்நாடக சங்கீதம் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு - ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தகவல்


கர்நாடக சங்கீதம் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு - ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தகவல்
x

ஜே.இ.இ. தேர்வுக்காக குழந்தைகள் சங்கீதம் கற்பதை நிறுத்த வேண்டாம் என காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னை,

கர்நாடக சங்கீதம் படித்தவர்கள் ஜே.இ.இ. தேர்வு மூலம் ஐ.ஐ.டி.யில் சேர்வதற்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது;-

“சிறுவயது முதலே கர்நாடக சங்கீதத்தில் கடுமையாக பயிற்சி பெற்ற குழந்தைகளுக்காக, சென்ற ஆண்டு முதல் சென்னை ஐ.ஐ.டி.யில் ஒரு சிறப்பு இடஒதுக்கீட்டை உருவாக்கியுள்ளோம். அதை இடஒதுக்கீடு என்று நாங்கள் குறிப்பிடவில்லை, கலை மற்றும் கலாச்சார சிறப்பு சேர்க்கை என்று குறிப்பிட்டுள்ளோம்.

அதன் மூலம் நடப்பாண்டில் சுமார் 7 கர்நாடக இசைக் கலைஞர்கள் ஐ.ஐ.டி.யில் பி.டெக் படிப்பில் சேர்ந்துள்ளனர். சங்கீதம் கற்கும் குழந்தைகள் ஜே.இ.இ. தேர்வுக்காக இசைப்பயிற்சியை நிறுத்திவிடுவதாக சிலர் கூறுகின்றனர். கலையை கொலை செய்வதற்கு ஜே.இ.இ. ஒரு காரணமாக இருக்க வேண்டாம் என்பதற்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சங்கீதம் கற்றுக் கொண்டவர்கள் அவர்கள் பெற்ற சான்றிதழ்கள் மற்றும் சில தகுதிகளின் அடிப்படையில் ஜே.இ.இ. தேர்வில் அதிக மதிப்பெண் பெறாவிட்டாலும், அவர்களுக்கு ஒரு முன்னுரிமை கொடுக்கப்படும். குழந்தைகள் சங்கீதம் கற்றுக்கொண்டிருந்தால், ஜே.இ.இ. தேர்வுக்காக அதனை நிறுத்த வேண்டாம். பிற்காலத்தில் சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்வதற்கு அவர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

இந்த திட்டத்தை மற்ற ஐ.ஐ.டி. கல்லூரிகளிலும் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். 23 ஐ.ஐ.டி. கல்லூரிகளிலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டால் சுமார் 500 இடங்கள் கிடைக்கும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story