போலீஸ்காரரை காரில் இழுத்து சென்ற ரவுடி - 2 தனிப்படை அமைப்பு


போலீஸ்காரரை காரில் இழுத்து சென்ற ரவுடி - 2 தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 27 Jun 2025 3:26 PM IST (Updated: 27 Jun 2025 5:04 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே ரவுடியை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் ஒருவர் காரில் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர்,

சென்னை பாடர்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அழகு ராஜா. இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்ற ரவுடியை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அழகு ராஜா உள்ளார்.

இந்நிலையில் பிரபல ரவுடி அழகு ராஜா திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக சென்னை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் அவரை பிடிக்க அங்கு விரைந்தனர். நேற்று மதியம் 2 மணி அளவில் அழகு ராஜா இருக்கும் இடத்தை கண்டுபிடித்த 2 போலீசார், அவரை பிடிக்க மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து சென்றனர். அழகு ராஜா காரில் சென்று கொண்டு இருந்தார்.

திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையில் கார் மெதுவாக சென்ற நேரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய போலீஸ்காரர், அழகு ராஜா சென்ற காரை வழிமறித்து பிடிக்க முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட அழகு ராஜா காரை நிறுத்தாமல் வேகமாக இயக்கினார்.

இருப்பினும் உயிரை பணயம் வைத்து அந்த போலீஸ்காரர் காரின் பக்கவாட்டில் தொங்கியபடி சென்றார். ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மேலாக போலீஸ்காரர் தொங்கியபடி பயணம் செய்தார். பின்னால் மற்றொரு போலீசார் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்தார்.

சினிமா பாணியில் நடந்த இந்த காட்சியை கண்ட வாகன ஓட்டிகள், மற்றும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியில் உரைந்தனர். ஒரு கட்டத்தில் தனது பிடியை விட்ட போலீஸ்காரர் சாலையில் விழுந்தார். அவர் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அதிர்ஷடவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து ரவுடி அழகு ராஜாவை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ரவுடி அழகு ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

1 More update

Next Story