கணவர் பிரிந்து சென்றதால் சோகம்: மகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

கணவர் பிரிந்து சென்ற சோகத்தில் மகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஈச்சங்கரணை கிராமத்தில் வசித்து வருபவர் டில்லி. இவரது மகள் கீதா (37 வயது). இவருக்கும், வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த அருண் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 8 வயதில் சுபஸ்ரீ என்ற மகள் இருந்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக கீதா, கணவரை பிரிந்து தனது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். கீதா, சென்னையில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி ஈச்சங்கரணை கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கீதா, மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு கீதா, தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் நன்றாக பேசிவிட்டு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார்.
இன்று காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் கீதா, அவரது மகள் சுபஸ்ரீ இருவரையும் காணவில்லை. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கம் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர்களது வீட்டின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் கீதா, அவரது மகள் சுபஸ்ரீ இருவரும் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் மிதந்த தாய்-மகள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த விரக்தியில் கீதா, தனது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






