தூத்துக்குடியில் சீசன் முடிந்தும் உயராத உப்பு விலை; உற்பத்தியாளர்கள் கவலை

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி சீசன் முடிவுக்கு வந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்து உள்ளன. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மழை காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டாலும், அதன்பிறகு ஏற்பட்ட சாதகமான சூழலால் உற்பத்தி அதிகரித்தது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி சீசன் முடிவுக்கு வந்தது. இந்த ஆண்டு 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதில் 6 லட்சம் டன் உப்பு மட்டுமே விற்பனையாகி உள்ளது. மீதம் 13 லட்சம் டன் உப்பு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் மழை தொடங்கிய பிறகு உப்பு விலை உயரும் என்று உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.ஆனால், சீசன் முடிந்த பிறகும் இதுவரை உப்பு விலை உயரவில்லை. ஒரு டன் முதல்தர உப்பு ரூ.2 ஆயிரத்து 500-க்கும், 2-வது தர உப்பு ரூ.1800 முதல் ரூ.1900 வரையும் விற்பனையாகிறது. போதிய விலை கிடைக்காமல் உப்பு உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.






