‘வழிபாட்டு முறைகளை அரசியலுக்கு பயன்படுத்துவதை சங்பரிவார் கைவிட வேண்டும்’ - மு.வீரபாண்டியன்

வழிபாட்டு உரிமைகளை பாதுகாத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது குறித்த வழக்கில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு மலை உச்சியில் உள்ள தூணில் விளக்கு ஏற்றலாம் என கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்திய அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மை கோட்பாட்டை புறந்தள்ளிவிட்டு, மதச்சார்ப்பு நிலையுடன் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. ஆன்மீகத்தை, வழிபாட்டு முறைகளை, இந்துத்துவ மதவெறி அரசியலுக்கு பயன்படுத்துவதை மத்திய மந்திரி பியூஸ் கோயல் போன்ற சங்பரிவார் உறுப்பினர்கள் உடனடியாக கைவிட வேண்டும். இல்லை எனில் அவர்களை எதிர்த்து கடுமையானப் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும்.
மதநல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும், வழிபாட்டு உரிமைகளையும் பாதுகாத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும் தொடர்ந்து போராடும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






