விஜய்யின் பிரசார பஸ்சை பறிமுதல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்


விஜய்யின் பிரசார பஸ்சை பறிமுதல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்
x

த.வெ.க. பிரசார பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்,

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொண்டார். இதற்காக நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழியில் தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகே மாலை 4 மணியளவில் விஜய்யின் பிரசார பஸ் சென்று கொண்டு இருந்தது.

அப்போது, த.வெ.க.வினரின் 2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விஜய்யின் பிரசார பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் விஜய்யின் பிரசார பஸ் நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இதுதொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய ஏட்டு தெய்வபிரபு அளித்த புகாரின் பேரில் த.வெ.க. பிரசார பஸ் டிரைவர் மீதும், மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த த.வெ.க. தொண்டர்கள் 2 பேர் மீதும் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் விஜய்யின் பிரசார பஸ்சை ஏன் பறிமுதல் செய்யவில்லை? என்று தமிழக அரசு வக்கீல்களிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதன் அடிப்படையில் அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் கபூர் தலைமையிலான தனிப்படையினர் விஜய் பிரசார பஸ்சை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் உயர் அதிகாரிகளிடம் இருந்து விஜய்யின் பிரசார பஸ்சை பறிமுதல் செய்ய எந்த நேரத்திலும் உத்தரவு வரும் நிலையில் உள்ளது. இவ்வாறு உத்தரவு வந்தவுடன் போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் கபூர் தலைமையிலான போலீசார் சென்னையில் உள்ள போலீசாரின் உதவியுடன் விஜய்யின் பிரசார பஸ்சை பறிமுதல் செய்ய உள்ளனர்.

1 More update

Next Story