கூட்ட நெரிசல் சம்பவம்: தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் கரூர் வருகை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 13 பேர் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி மேற்கொண்ட பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இன்று விசாரணையை தொடங்க உள்ளனர்.
இந்த நிலையில், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான குழுவினர் இன்று கரூர் வந்துள்ளனர். கூட்ட நெரிசல் சம்பவம் நிகழ்ந்த இடமான வேலுசாமிபுரத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் அன்றைய தினம் நடந்த நிகழ்வுகள் குறித்து அதிகாரிகள் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரில், 13 பேர் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 7 பேர் அருந்ததியர் சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், உயிரிழந்தவர்களில் 5 பேர் கரூரில் உள்ள ஏமூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






