கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்


கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
x

கோப்புப்படம்

கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பதின்மூன்றாயிரம் என்று இருக்கின்ற நிலையில், வெறும் ஐயாயிரம் ஆசிரியர்கள் மட்டுமே நிரந்தரமாக பணியாற்றி வருகிறார்கள். கிட்டத்தட்ட ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்காலிகமாக கடந்த இருபது ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் என்ற பெயரில் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவ்வாறு கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரியும் அனைவருமே அந்தப் பதவிக்குரிய முழுத் தகுதியையும் பெற்றவர்கள். 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்று தமிழ்நாடு இன்று விழா நடத்துகிறது என்றால், அதில் முக்கியப் பங்கு சுவரவ விரிவுரையாளர்களுக்கு உண்டு என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

இப்படிப்பட்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆண்டிற்கு 11 மாதங்களுக்கு மட்டும் மாதம் 25,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது என்பது மிகவும் வேதனை அளிக்கும் செயல். சிறிய தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பெரிய தனியார் நிறுவனங்களிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சட்டப்பூர்வ பயன்களான வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை மருத்துவக் காப்பீடு, விடுப்புச் சலுகை என எவ்விதப் பயன்களும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அளிக்கப்படுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது.

இன்றைக்கு அமைப்புசாரா பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கு கூட ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகின்ற நிலையில், அதைவிட குறைவாக சுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்குவது என்பது சட்டத்திற்கு விரோதமான முறையற்ற செயல். உயர் கல்வியை முறைப்படுத்தும் அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு 57,500 ரூபாய் மாதச் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்று ஏற்கெனவே ஆணை பிறப்பித்திருந்தது.

இதனை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆணையை பின்பற்றுகின்றன. இது மட்டுமல்லாமல் 1,146 கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப்படுத்தும் பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் 56-ஐயும் தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. இதுகுறித்து நான் ஏற்கெனவே பல அறிக்கைகள் விடுத்திருந்தேன். இருப்பினும், தி.மு.க. அரசு இதனைச் செயல்படுத்த தொடர்ந்து மறுத்து வருவது வேதனை அளிக்கிறது.

ஒரு வேளை எவ்விதமான சட்டப்பூர்வமான பயன்களையும் அளிக்காமல் அவர்களை துன்புறுத்துவதற்குப் பெயர்தான் திராவிட மாடல் அரசு போலும்! இதற்குப் பெயர்தான் சமூக நீதியா? தங்கள் கோரிக்கையினை வலியுறுத்தி பல்வேறு அறப் போராட்டங்களை நடத்திய கவுரவ விரிவுரையாளர்கள் தற்போது கருப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரிகளின் முன்பு அடையாள வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

கவுரவ விரிவுரையாளர்களின் நீண்டகால அனுபவத்தினைக் கருத்தில் கொண்டு, அவர்களுடைய உழைப்புக்கு மதிப்பளித்து உயர் கல்வியின் ஆணிவேராகத் திகழும் அவர்களின் திறனுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் முதற்கட்டமாக பல்கலைக்கழக மானியக் குழு பிறப்பித்த உத்தாவின்படி 57,500 ரூபாய் ஊதியம் வழங்கவும், பின்னர் அவர்களை நிரந்தரமாக பணியமர்த்தவும் முதல்-அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story