பொது இடங்களில் புகைப்பிடிப்பதையும், மது அருந்துவதையும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

கோப்புப்படம்
புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம் இருக்கக்கூடாது என்பதற்கேற்ப தமிழக அரசு திட்டங்கள் வகுத்து செயல்படுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம் இருக்கக்கூடாது என்பதற்கேற்ப தமிழக அரசு திட்டங்கள் வகுத்து செயல்படுத்த வேண்டும். காரணம் புகைப்பிடிப்பதால், மது அருந்துவதால் பலவித புற்றுநோய் வரலாம், உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழப்பும் ஏற்படலாம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3500 முதல் 4000 பேர் வரை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனம் ஏற்கனவே தகவல் வெளியிட்டது.
பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கும், அவர்களின் அருகில் இருந்து சுவாசிப்பவர்களுக்கும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புண்டு. பொது இடங்களில் புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு சுமார் 13.20 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், அருகில் இருப்பவர்கள் சுவாசிப்பதால் ஆண்டுக்கு சுமார் 2.20 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கும் செய்திகள் கவலைக்குரியது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகமானது பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை 2008 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவந்தது. ஆனால் அவ்வப்போது மட்டுமே இந்த சட்டமானது கடைபிடிக்கப்பட்டு பொது இடங்களில் புகைப்பிடிப்போருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சட்டத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
குறிப்பாக பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, பொது சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் உட்பட, 21 பேருக்கு புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பஸ் நிலையங்கள், டீக் கடைகள், வாகனம் ஓட்டும்போது என, பொது இடங்களில் சிகரெட், புகையிலை பொருட்கள் பயன்படுத்தப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்.
மாநகரம் முதல் குக்கிராமம் வரை சிறுவர் முதல் முதியோர் வரை அனைவரும் கடந்து செல்லும் பொது இடங்களில், சாலையோரங்களில், இருட்டான பகுதிகளில் புகைப்பிடிப்பதாலும், மது அருந்துவதாலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் புகைப்பிடிப்பவர்களும், மது அருந்துபவர்களும் உடல்ரீதியாக மன ரீதியாக பாதிக்கப்படுவதோடு அவர்களின் குடும்பத்தினரும் உடல்ரீதியாக மன ரீதியாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
இச்சூழலில் பொது இடத்தில் புகைப்பிடிக்கவும், மது அருந்தவும் தடை இருந்தும் அதை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். எனவே எவரும் பொது இடங்களில் புகைப்பிடிக்காமல், மது அருந்தாமல் இருக்க தமிழக அரசு நடைமுறையில் உள்ள சட்டத்தை நாள்தோறும் முறையாக சரியாக கடைபிடித்து பொது மக்களின் உடல்நலனைக் காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






