தமிழர் அடையாளமான கல் மண்டபங்களை புதுப்பித்து மறுசீரமைக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன் கோரிக்கை


தமிழர் அடையாளமான கல் மண்டபங்களை புதுப்பித்து மறுசீரமைக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன் கோரிக்கை
x

திமுக ஆட்சியில் கல்மண்டபங்கள், சமூக விரோதிகளின் கூடாரமாக நிலைகுலைந்து கிடக்கின்றன என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னை

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் விழுப்புரம், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வரலாற்றுப் பெருமை வாய்ந்த கல் மண்டபங்கள் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஒரு காலத்தில் நெடும்பயணம் மேற்கொள்ளும் மன்னர்களும், வழிப்போக்கர்களும் தங்கி இளைப்பாரும் அன்னச்சத்திரங்களாக விளங்கிய கல்மண்டபங்கள், திமுக ஆட்சியில் சமூக விரோதிகளின் கூடாரமாக நிலைகுலைந்து கிடக்கின்றன.

தமிழ்மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் காவலர்களாகத் தம்மை முன்னிறுத்திக் கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் மன்னர்களின் கலைநயத்தையும், கருணை உள்ளத்தையும் பறைசாற்றும் கல் மண்டபங்களைக் கண்டுகொள்ளாமல் அசட்டை செய்வது ஏன்? தனது தந்தையின் பேனாவிற்குக் கோடிக்கணக்கில் சிலை வைப்பதிலும், தனது மகனுக்காக கார் ரேஸ் நடத்துவதிலும் ஆர்வத்துடன் செயலாற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, வரலாற்று எச்சங்களாக மிஞ்சி நிற்கும் கல் மண்டபங்களைப் பாதுகாக்கத் தோன்றவில்லையா? காலத்தின் கண்ணாடியாக இன்றளவும் நமது பண்டைய கலாச்சாரங்களின் நிழலாகத் தொடரும் கல் மண்டபங்களைப் பொத்திப் பாதுகாக்க வேண்டிய ஆளும் அரசு, தனது கடமையைத் தலைமுழுகிவிட்டதா?

எனவே, ஏராளமானோர் தங்கும் வசதிகளுடன் கட்டப்பட்ட தமிழர் அடையாளமான கல் மண்டபங்களை அரசு புதுப்பித்து மறுசீரமைக்க வேண்டும் எனவும், அதுவரையில் ஆபத்தான நிலையில் சிதிலமடைந்து காணப்படும் கல் மண்டபங்களுக்கு மக்கள் செல்லத் தடை விதிக்க வேண்டுமெனவும் முதல்வர் மு.க. ஸ்டாலினைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story