செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு உபரி நீர் திறப்பு

குன்றத்தூர், திருமுடிவாக்கம் பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதேபோன்று வடகிழக்கு பருவமழையை முன்னிட்டும் பரவலாக பல்வேறு நகரங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரிகள் ஆகியவை விரைவாக நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில், நீர்மட்டம் 21 அடியை நெருங்கியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், உபரி நீரை திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து ஏரியில் இருந்து நீர் திறப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, குன்றத்தூர் அருகேயுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அரசு நிர்வாகம் அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.
ஏரியில் இருந்து, முதல் கட்டமாக 100 கன அடி தண்ணீர் திறக்கப்படும். இதனை முன்னிட்டு, குன்றத்தூர், திருமுடிவாக்கம் பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.






