ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க தமிழக அரசு முன்வர வேண்டும் - டிடிவி தினகரன்


ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க தமிழக அரசு முன்வர வேண்டும் - டிடிவி தினகரன்
x

சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கைது - ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட முயன்ற தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமல்லாது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் இருப்பதே தொடக்கக்கல்வி ஆசிரியர்களைத் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றவும், அவர்களின் துயர நிலை குறித்தும் அரசின் கவனத்தை ஈர்க்கவும் நடைபெற்ற போராட்டத்தை காவல்துறையினரைக் கொண்டு அடக்க முற்படுவதும், அவர்கள் மீது அடக்குமுறையை ஏவ நினைப்பதும் எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story