மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகளை முறையாக பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருக்கும் சூழலில் கோவை மற்றும் நீலகிரியில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோவை, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கையை விடுத்திருக்கும் வானிலை ஆய்வு மையம், வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் கணித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே நொய்யல், பவானி, ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், மேலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
மேலும், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகளை முறையாக பின்பற்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, கனமழையால் மக்கள் பாதிக்கப்படும் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் துரிதப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.






