‘தமிழக அரசு அனைத்து துறைகளை சார்ந்த அலுவலர்களைக் கொண்டு குழு அமைக்க வேண்டும்’ - ராமதாஸ் வலியுறுத்தல்

போராடுபவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.
டிசம்பர் 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டமும், தொடர்ந்து 27-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடும் நடத்தப்பட்டது. ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது.
இதற்கிடையே தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி 309-ன் படி ஜனவரி 3-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய திட்டம் மூலமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டது.
இதனை ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டா ஜியோ அமைப்புகள் வரவேற்றுள்ளதோடு, போராட்டத்தையும் ஒத்தி வைத்தனர். இதற்கிடையில் பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக ஆக்டோ ஜியோ என்ற அமைப்பை உருவாக்கி பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியிறுத்தி வருகின்ற 3-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
இதே போல திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.15 ஆண்டாக பணிபுரிகின்ற 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தற்போது ரூபாய் 12,500 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.பணி நிரந்தரம் கேட்டு 17 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தினர்.
நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்த அறிவிப்பில், அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தரப்பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நியமனம் செய்ய ஏதுவாக அவர்களது பணிக்காலத்தை அடிப்படையாக வைத்து இதற்கான தேர்வுகளில் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் இதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என அறிவித்தார்.
இதற்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பில் சார்பில் முதல்வர் ஸ்டாலின் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அளித்த உறுதியின்படி எங்களுக்கு பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுகிறோம். பாதமான அரசாணை வரும்பட்சத்தில் மீண்டும் போராட்டத்தை தொடர்வோம் என அறிவித்துள்ளது. மேலும் அங்கன்வாடிப்பணியாளர்கள் போராட்டம், ஊராட்சி செயலாளர்களின் போராட்டம் என தங்களின் உரிமையை கேட்டு போராடிக்கொண்டும், போராடவும் உள்ளனர். நேற்று ஜாக்டோ ஜியோ, இன்று பகுதி நேர ஆசிரியர்கள் என தற்காலிக தீர்வை கைவிடவேண்டும்.
தமிழக அரசு அனைத்து துறைகளைச்சார்ந்த அலுவலர்களைக் கொண்டு குழு அமைத்து, போராடுபவர்களின் நியாயமான உரிமையை அளித்து நிரந்தர தீர்வு காணவேண்டும் என வலியிறுத்துகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






