தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி டீ மாஸ்டர் பலி

கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு அருகே முதியவர் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கும் இளையரசனேந்தல் சுரங்கப்பாதையின் ரெயில்வே தண்டவாளத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் நேற்று முன்தினம் முதியவர் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்தவர் எட்டயபுரம் வட்டம், கருப்பூர் என்.சுப்பலாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த வேல் மகன் ரத்தினவேல் (வயது 60) என்பதும், அவர் சிந்தலக்கரையில் உள்ள ஓட்டலில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் கோவில்பட்டி சீனிவாசநகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






