சென்னை கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து - தி.மு.க. புறக்கணிப்பு

தேநீர் விருந்தில் ஐகோர்ட்டு நீதிபதிகள், முன்னாள் கவர்னர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பார்கள்.
அந்த வகையில் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று தேநீர் விருந்து நடைபெற்று வருகிறது. கவர்னரின் தேநீர் விருந்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, சென்னை காவல் ஆணையாளர் அருண், ஐகோர்ட்டு நீதிபதிகள், முன்னாள் கவர்னர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வளர்மதி, வைகைச்செல்வன், பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க. அன்புமணி தரப்பினர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தே.மு.தி.க. சார்பில் எல்.சுதீஷ், தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் ஆகியோரும் கவர்னரின் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர். அதே சமயம் கவர்னர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்துள்ளன.






