ஏர்-பஸ் ஏ320 விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு: உலகம் முழுவதும் விமான சேவை பாதிப்பு

A320 விமானங்களில் ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவிலும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏர்-பஸ் ஏ320 விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு: உலகம் முழுவதும் விமான சேவை பாதிப்பு
Published on

புதுடெல்லி,  

ஏர்பஸ் நிறுவனத்தின் A320 ரக விமானங்களை உலகம் முழுவதும் பல்வேறு விமான நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஏர்பஸ் A320 விமானங்களின் அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோளாறை சரிசெய்யும் பணிகளில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள சுமார் 6 ஆயிரம் ஏர்பஸ் A320 விமானங்களில் மென்பொருளை மாற்றி மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த விமானங்களை இயக்க முடியாத சூழல் உருவாகி, உலகம் முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக ஏர்பஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

A320 விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்காரணம் தீவிர சூரிய கதிர்வீச்சு விமானக் கட்டுப்பாடுகளின் செயல்பாட்டிற்கு முக்கியமான தரவுகளை சிதைக்கக்கூடும் என கருதப்படுகிறது. இதனால் தற்போது பயன்பாட்டில் உள்ள A320 விமானங்கள் பாதிக்கப்படலாம். மென்பொருளை மாற்றி மேம்படுத்தும் நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்.

இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் 6 ஆயிரம் விமான சேவைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு ஏர்பஸ் நிறுவனம், A320 விமானங்களை பயன்படுத்தும் விமான நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.இதையடுத்து பல விமான நிறுவனங்கள் தங்களது சேவையில் ரத்து மற்றும் தாமதங்களை அறிவித்தன. ஏர் பிரான்ஸ் நிறுவனம் 35 விமானங்களை ரத்து செய்தது. மேலும் பல நிறுவனங்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான விமானங்களில் மென்பொருளை மாற்றுவதற்கு சில மணி நேரங்கள் ஆகும் என்றும், சுமார் 1,000 விமானங்களுக்கு இந்த செயல்முறை நிறைவடைய சில வாரங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A320 விமானங்களில் ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவிலும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 560 A320 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.இதில் 200 முதல் 250 விமானங்களில் மென்பொருள் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏர் இந்தியா, இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இது குறித்து ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கின. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவையில் தாமதம் ஏற்படும் சூழல் உள்ளதாக தெரிவித்தன.

இந்த கோளாறு காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு விமான சேவையில் குறிப்பிடத்தக்க பாதிப்பு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் A319, A320 ரக விமானங்களை இயக்க வேண்டாம் என்று இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. தேவையான மென்பொருள் மேம்படுத்துதல்களை உடனடியாக மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் A318, A319, A320, A321 ரக விமானங்களை உடனடியாக பரிசோதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையே இன்று காலை 10 மணி நிலவரப்படி இந்தியாவில் 189 A320 விமானங்களுக்கான மென்பொருள் மேம்படுத்தல்கள் நிறைவடைந்தன. பாதிக்கப்பட்ட அனைத்து விமானங்களின் மேம்படுத்தல்களும் நாளை காலை 5.29 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லி, பெங்களூரு, மும்பை, சென்னை, ஐதராபாத், அகமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் விமான நிறுவன தளங்களில் மென்பொருள் மேம்படுத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com