துபாய் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு


துபாய் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Jun 2025 2:38 PM IST (Updated: 8 Jun 2025 3:58 PM IST)
t-max-icont-min-icon

துபாய் செல்ல வேண்டிய 312 பயணிகள் சுமார் 3 மணி நேரம் விமானத்திற்குள் அமரவைக்கப்பட்டனர்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 9.50 மணிக்கு 312 பயணிகள் 14 விமான ஊழியர்கள் என 326 பேருடன் புறப்பட்டது. ஓடுபாதைக்கு நோக்கி சென்றபோது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக விமானத்தை நிறுத்திவிட்டு, இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார்.

இதையடுத்து விமான பொறியாளர்கள் குழு மற்றும் விமான நிலைய பராமரிப்பு ஊழியர்கள் விரைந்து வந்து, மற்ற விமானங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பழுது ஏற்பட்ட விமானத்தை ஓடுபாதையில் இருந்து நகர்த்தி வேறு பாதைக்கு கொண்டு சென்றனர். பயணிகள் விமானத்துக்குள்ளேயே அமரவைக்கப்பட்டிருந்த நிலையில், விமான பொறியாளர்கள் குழுவினர் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் துபாய் செல்ல வேண்டிய 312 பயணிகள் சுமார் 3 மணி நேரம் விமானத்திற்குள் இருந்து தவித்தனர். இருப்பினும் பழுது உடனே சரி செய்யப்படாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் நடைமேடை அருகே விமானம் கொண்டு வரப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

பழுது சரிசெய்யப்பட்ட பின்னர் விமானம் துபாய்க்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் ஒட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அவசரமாக செல்ல வேண்டியவர்களை வேறு விமானங்களில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் .கண்டுபிடித்ததால் 326 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story