பள்ளி மாணவர்களிடையே மோதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்வது கண்டிக்கத்தக்கது - செல்வப்பெருந்தகை


பள்ளி மாணவர்களிடையே மோதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்வது கண்டிக்கத்தக்கது - செல்வப்பெருந்தகை
x
தினத்தந்தி 6 Dec 2025 2:38 PM IST (Updated: 6 Dec 2025 3:04 PM IST)
t-max-icont-min-icon

கல்வி பயிலும் மாணவர்கள் வன்முறைக்கு ஆளாக வேண்டிய நிலை குறித்து ஆய்வு செய்யப்படவேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கும்பகோணம், பட்டீஸ்வரம் அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 12 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையும், அதிர்ச்சியையும் ஏற்டுத்துகிறது. கல்வி பயிலும் மாணவர்கள் வன்முறைக்கு ஆளாக வேண்டிய நிலை குறித்து ஆய்வு செய்யப்படவேண்டும்.

பள்ளி மாணவர்களிடைய மோதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்வது கண்டிக்கத்தக்கது. பள்ளிகளில் ஒழுங்கு, பாதுகாப்பு, மனநல வழிகாட்டுதல், மாணவர் உறவு மேம்பாடு, நீதிபோதனை வகுப்புகள் போன்ற அடிப்படை அம்சங்கள் மீது தேவையான கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் பிரச்சனைகளை கண்காணித்து உடனடியாக அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.

ஒரு குழந்தையின் உயிரை பறித்த இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க அரசு, கல்வித்துறை, பள்ளி நிர்வாகம் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இளம் உயிர்கள் இழக்கப்பட்ட பிறகு வருத்தம் தெரிவிப்பது போதாது. இத்தகைய துயரங்கள் மீண்டும் நிகழாத சூழலை உருவாக்குவது தான் சமூகத்தின் உண்மையான பொறுப்பு. உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story