பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் தேதி அறிவிப்பு


பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் தேதி அறிவிப்பு
x

பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளன.

சென்னை,

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாளை அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப்பை மற்றும் கரும்பு வழங்கப்பட்டன.

2023-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு உள்பட ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டன. அதேபோல 2024-ம் ஆண்டில் 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டன. அதோடு ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டன.

ஆனால் இந்த ரொக்கத்தொகை மத்திய -மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படவில்லை. அதே சமயம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படவில்லை.

இதற்கிடையே வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளன. அதோடு ரொக்கப்பணமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அது ரூபாய் ஆயிரமா?, ரூ.2 ஆயிரமா?, ரூ.3 ஆயிரமா அல்லது ஏன் ரூ.5 ஆயிரமாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்தால்தான் தெரியும். இருந்தாலும் வரும் பொங்கலுக்கு ரொக்கப்பணம் வழங்குவது மட்டும் உறுதியாகி உள்ளது. அதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் அல்லது ஜனவரி மாத தொடக்கத்திலேயே அறிவிக்க உள்ளார்.

இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு தற்போது தயாராக உள்ளது. முதல்-அமைச்சர் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டவுடன், அதன் விநியோகம் உடனடியாக தொடங்கும். வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து "பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படுமா?" என்று தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதெல்லாம் பிறகுதான் (பார்த்துக்கொள்ளலாம்)" என்று பதிலளித்தார்.

1 More update

Next Story