தமிழக வெற்றிக் கழக கட்சி கொடி ஏற்றப்பட்ட மறுநாளே இறக்கம்.... அரியலூரில் பரபரப்பு


தமிழக வெற்றிக் கழக கட்சி கொடி ஏற்றப்பட்ட மறுநாளே இறக்கம்.... அரியலூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Dec 2024 7:59 AM IST (Updated: 23 Dec 2024 8:03 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் தமிழக வெற்றிக் கழக கட்சி கொடி ஏற்றப்பட்ட மறுநாளே இறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கார்குடி காலனி தெருவில் வசித்து வருபவர் பிரியதர்ஷினி ஜெயபால். இவர் விஜய் நடத்தி வரும் தமிழக வெற்றிக் கழக கட்சியில் ஒன்றிய மகளிரணி நிர்வாகியாக பணியாற்றி வந்தார். அண்மையில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டிலும் மகளிர் அணி நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு சென்றார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விஜய் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இவரது சொந்த ஊரான கார்குடி காலனி தெருவிலும் கொடி ஏற்றப்பட்டது.

இதற்கிடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் உள்பட மாவட்ட நிர்வாகிகள் பிரியதர்ஷினி உள்ளிட்ட மகளிர் நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பிரியதர்ஷினி உள்பட 10-க்கும் மேற்பட்ட மகளிர் நிர்வாகிகள் ஏற்றப்பட்ட தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியினை நேற்று இறக்கினர்.

பின்னர் தனது கட்சி துண்டு, காரில் கட்டிய கொடி மற்றும் பேட்ச் அட்டைகளை எடுத்துச் சென்றனர். அப்போது அங்கு வந்த கட்சி நிர்வாகி ஒருவர் மாவட்ட செயலாளர் ஏற்றிய கொடியை எப்படி நீங்கள் இறக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்கள், நாங்கள் சொந்த செலவில்தான் செய்துள்ளோம் என்றும், கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு என்று தலைவர் விஜய் கூறியதால்தான் கட்சியில் சேர்ந்தோம். ஆனால் பெண்களுக்கு மதிப்பில்லை என்பதால் கட்சியில் இருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம். எங்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறினர்.

இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்சியில் மகளிர் நிர்வாகிகள் கூண்டோடு விலகிய சம்பவம் அரியலூர் மாவட்ட விஜய் கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story