தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமான ஒன்று என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை மக்கள் பெற வேண்டுமென்றால், புறத்தூய்மை இன்றியமையாதது. சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால்தான் மாசுமறுவற்ற காற்றும், தூய்மையான குடிநீரும் கிடைக்கும். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது மாநில அரசின் கடமை. ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது நிலவுகிறது.
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கை எண். 285-ல், """"ஊராட்சிகள், அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மாணவர் விடுதிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகள் ஆகியவற்றில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்"" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, வாக்குறுதிக்கு முற்றிலும் முரணான நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் தினமும் சேரும் 7000 டன் குப்பையை சேகரித்து பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் கொட்டும் பணியில் 17,000 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இது தவிர, தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட 5,000 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் பணி நிரந்தரம் கோரி நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். இவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மனமில்லாத தி.மு.க. அரசு, குப்பை மேலாண்மைப் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளது. இதன்மூலம் ஒப்பந்த அடிப்படையில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களது பணியை நிரந்தரம் செய்யக் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக குப்பை சேகரிக்கும் பணி தடைபட்டு, சுகாதாரச் சீர்கேடு சென்னை மாநகரத்தில் ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், தண்டையார்பேட்டையில் சாலையோரம் அனுமதியின்றி கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றப்படாததன் காரணமாக அப்பகுதியில் கிருமித் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும், அதே சமயத்தில் அவர்களுடைய பணிப் பாதுகாப்பினை மாநகராட்சி உறுதி செய்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாக உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உழைப்போர் உரிமை இயக்க மாநிலத் தலைவர், தேசிய நகர்ப்புறத் திட்டத்தின்கீழ் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கான ஊதியம் 22,590 ரூபாயிலிருந்து 16,950 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பணி நிரந்தரம் என்று கூறிவிட்டு தற்போது தூய்மைப் பணியாளர்களை அலட்சியப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டுமென்றும், ஏற்கெனவே பெற்று வந்த சம்பளத்தை குறைக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமான ஒன்று.
இரண்டு வருடங்களில் ஒருவர் 480 நாட்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்தால் அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டுமென்று 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் துறை நிறுவனங்கள் (தொழிலாளர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்குதல்) சட்டம் கூறுகிறது. பணி நிரந்தரம் குறித்து தொழில் துறை நிறுவனங்களுக்கு சட்டத்தை இயற்றியுள்ள அரசே அந்தச் சட்டத்தை புறக்கணிப்பது இயற்கை நியதிக்கு புறம்பானது. தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக பல கோடி ரூபாய் மதிப்பில் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுவதற்குப் பதிலாக, அந்தப் பணத்தை வைத்து நீண்ட காலமாக பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்தால் அவர்களது வாழ்வாதாரம் மேம்படும். இதைச் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை தி.மு.க. அரசு சிதைத்து வருகிறது. ஒருவேளை, தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதைவிட ‘ஒப்பந்தம்’ பயன் தரும் என்று தி.மு.க. நினைக்கிறதோ என்ற சந்தேகம் மக்களுக்கு தற்போது ஏற்பட்டு இருக்கிறது. இது தூய்மைப் பணியாளர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.
எனவே, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், சென்னை மாநகராட்சி மக்களின் சுகாதாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும், தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






