போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி

நான்கு பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை 10 நாட்களை கடந்தும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
சென்னை,
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சென்னை மாநகராட்சியின் மண்டலம் 5 மற்றும் மண்டலம் 6 பகுதிகளைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் நூறு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் உடனடியாக நிரந்தரப் பணியாளர்களாக்க வேண்டும் என்பதே இவர்களது முக்கிய கோரிக்கைகளாக இருந்தன.
இந்நிலையில், இப்போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக அம்பத்தூர் பகுதியில் உள்ள உழைப்போர் உரிமை இயக்க அலுவலக வளாகத்தில் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை 10 நாட்களை கடந்தும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையிலும், “31.07.2025 நிலவரப்படி சென்னை மாநகராட்சியிலேயே நேரடியாக நிரந்தரப் பணி வழங்க வேண்டும்” என்ற ஒரே கோரிக்கையில் அவர்கள் உறுதியாக நிற்கின்றனர்.
பல்லாண்டுகளாக சென்னை நகரின் தூய்மையையும் பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் காத்து வரும் இந்தத் தொழிலாளர்கள் இன்று பணிப் பாதுகாப்பின்றி, எதிர்கால நிச்சயமற்ற நிலையில் தவித்து வருகின்றனர். ஒப்பந்த முறையில் பணியாற்றுவதால் இவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை, மருத்துவ வசதி இல்லை, விடுப்பு உரிமை இல்லை, வேலை நிரந்தரம் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்காக இவர்களது வாழ்வாதாரத்தைப் பறிக்கும் தனியார்மயக் கொள்கை மனிதாபிமானமற்றது மட்டுமல்ல, சமூக நீதிக்கும் எதிரானது.
எனவே,போராடும் தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைப்படி, 31.07.2025 நிலவரப்படி நிரந்தரப் பணியாளர்களாக அறிவித்து, முழு ஊதியம், ஓய்வூதியம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும். குறிப்பாக, உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நான்கு பெண் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்னதாகவே தமிழக முதல்-அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். சமூக நீதி மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்காக எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






