இந்துக்களிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்ற எண்ணம்...பவன் கல்யாண் ஆவேசம்


இந்துக்களிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்ற எண்ணம்...பவன் கல்யாண் ஆவேசம்
x

இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று நம்புகிறேன் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்

சென்னை,

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் முதல் வீ’டே திருப்பரங்குன்றம்தான். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது இந்துக்களின் பாரம்பரிய வழக்கமாகும். ஆனால், தங்களின் நம்பிக்கையையும் சடங்குகளையும் செய்வதற்குக்கூட நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை இந்துக்களுக்கு ஏற்பட்டுள்ளது சோகமானதாகும்: முரணானதாகும். சட்டப்போராடத்தில் வென்ற பிறகும், சொந்த நாட்டில் சொந்த இடத்தில் தங்களது எளிய – அமைதியான சடங்குகளைக் கூட இந்து பக்தர்களால் செய்ய முடியவில்லை. உண்மையிலேயே அவர்களுக்கு அரசமைப்பு சாசன நீதி கிடைத்துள்ளதா?

பாரதத்தில் உள்ள இந்துக்கள் அனைவரும் இதனை புரிந்துகொள்ள வேண்டும் – கசப்பான உண்மை இதுதான் – தீபத்தூணில் தீபமேற்ற நமக்கு உரிமை உள்ளது என்பதை மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உறுதி செய்துள்ளது. முதலில் தனி நீதிபதி மூலமாகவும்: பின்னர் இரு நீதிபதிகள் அமர்வு மூலமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டரீதியாக நாம் வெற்றி பெற்று விட்டோம். இருந்தும், நாம் விட்டுக்கொடுக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.

உங்களையே நீங்கள் கேட்டுப் பாருங்கள் – எந்த சமய விழாக்களையேனும் ஒரு வாரம் தள்ளிப்போட முடியுமா? குறிப்பிட்ட ஒரு நாளில் நடக்க வேண்டிய புனித திருவிழாவை, மற்றொரு நாளுக்கு மாற்ற முடியுமா? முடியாது. காரணம், சமயம் சார்ந்த காலநேரமும்: ஒவ்வொரு சமய நாள்காட்டிகளும் மாற்றப்பட முடியாதவை.

ம், சனாதன தர்மத்தை பொறுத்தவரை – கார்த்திகை தீபத்துக்கான – அந்த புனித நொடி திருடப்பட்டுவிட்டது: மொத்தமாக காணாமலே போய்விட்டது. ஏன்? காரணம், இந்துக்களிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்ற எண்ணம். அவ்வாறு நடந்து கொள்வோர் சில நேரம் அரசாக இருக்கலாம் – சில நேரம் அதிகாரிகளாக – சில நேரம் அரசுசாரா அமைப்புகளாக – சில நேரம் போலி அறிவுஜீவி குழுக்களாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் இந்துக்கள்தான் இழக்கின்றனர். மற்றவர்களுக்காக விட்டுக்கொடுக்கின்றனர். நாம் நம் உரிமையை வென்றெடுத்தோம்: தீபமேற்றுவதில் கோட்டை விட்டோம். நமக்கு எதிராக மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக வரும் நிராகரிப்புகள், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பால் வேறு ஒன்றைக் கோருகின்றன. அது, நமது கோயில்களையும் நமது சடங்குகளையும் நாமே பார்த்துக்கொள்ள நமக்கென்று சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம் தேவை என்பதுதான்.

இந்து சமய பாரம்பரியங்களையும் சடங்குகளையும் நையாண்டி செய்வது சில குழுக்களுக்கு வாடிக்கையாக உள்ளது. இதே விதமாக மற்ற சமயத்தினரிடம் அவர்கள் நடந்துகொள்வார்களா?

இந்திய அரசமைப்பு சாசனத்தின் 25வது சட்டப்பிரிவு வழங்கியுள்ள சமய சுதந்திரம் ஓர் அடிப்படை உரிமையாகும். அது, இந்துக்களுக்கு மட்டும் பெயரளவுக்கான உரிமையாகிவிடுமா? காவல்துறை ஆணையரும் மாவட்ட ஆட்சியரும் நீதிமன்ற தீர்ப்பையே இல்லையென்று ஆக்கிவிட முடியுமா? தீபமேற்றுவது பிரச்சினையை ஏற்படுத்தாத சமயக் கடமை என்று உயர் நீதிமன்றமே உறுதி செய்த நிலையில் – அதை சமூக நல்லிணக்கத்துக்கான அச்சுறுத்தல் என்று முடிவு செய்வது யார்? எந்த சட்ட அளவுகோல்களின் படி அந்த முடிவுக்கு வந்தார்கள்? இந்து அறநிலையத் துறை தொடர்ந்து இந்து பக்தர்களின் நலன்களுக்கும் – கோயில் பாரம்பரியத்துக்கும் எதிராக செயல்படுவது எவ்வாறு? தங்களுக்கான பொறுப்புடைமையிலிருந்து அறநிலையத் துறை அதிகாரிகள் எவ்வாறு தப்பிக்கிறார்கள்?

சமயப் பிரச்சினைகள் எழும்போது, எவ்வாறு ஒற்றுமையுடனும் கூட்டாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை அபிரகாம் மதத்தவர்களைப் பார்த்து இந்துக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் சமய நம்பிக்கைக்காக இனம், மொழி அனைத்தையும் கடந்து அவர்கள் செயல்படுவார்கள்.

சாதி, மொழி சார்ந்து இந்துக்கள் பிரிந்துகிடக்கும் வரை – இந்து சமயத்தின் மீது நையாண்டி, அவமானம், பழிதூற்றுதல் - என எல்லாம் நடக்கும். இந்து தர்மம் - தமிழில் சொல்வதெனில் அறத்தின் அடிப்படையில், குறைந்தபட்ச பொதுத் திட்டத்தின் கீழ் இந்துக்கள் ஒன்றுபடவில்லையெனில், இந்து என்கிற உணர்வுநிலையை இழந்துவிடுவோம்.

சொந்த மண்ணில் தங்களுக்கு நேரும் அவமானங்களுக்கு எதிராக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை – காமாக்யா முதல் துவாரகா வரை இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என நான் நம்புகிறேன். என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story