கவர்னரின் செயல்பாடுகளைத் தமிழக மக்கள் வெறுக்கிறார்கள்: அமைச்சர் கோ.வி.செழியன்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை இந்தியாவே உற்று நோக்குகிறது என்று அமைச்சர் கோ.வி.செழியன் கூறினார்.
கவர்னரின் செயல்பாடுகளைத் தமிழக மக்கள் வெறுக்கிறார்கள்: அமைச்சர் கோ.வி.செழியன்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

மத்திய அரசு ஏற்படுத்திய இடர்பாடுகள் மற்றும் பொருளாதாரத்தை அடி பாதாளத்திற்குத் தள்ளிய 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி ஆகிய சூழல்களுக்கு இடையேதான் திமுக அரசு பொறுப்பேற்றது. பொறுப்பேற்ற பிறகு, எந்த மாநில முதல்-அமைச்சரும் செய்யாத வகையில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் தனது முதல் பட்ஜெட்டை அறிவிக்கும் முன்பே பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தனிமனித வருமான வளர்ச்சியில் 16.5 சதவீதம் என இரட்டை இலக்கை எட்டித் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. பொருளாதார நெருக்கடியிலும், பொருளாதார வளர்ச்சியை உருவாக்கிய முதல்-அமைச்சரின் செயலை இந்தியாவே உற்று நோக்குகிறது. தமிழக அரசு பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதாக மத்திய அரசே பாராட்டிய பிறகு, வேறு யாருடைய பாராட்டும் நமக்குத் தேவைப்படப் போவதில்லை.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். கவர்னராக மாறிவிட்டார். திராவிட மாடல் அரசு எதைச் செய்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடுவது, காலம் தாழ்த்துவது, இந்த அரசால் எந்தப் பயனும் இல்லை எனத் திரித்துப் பேசுவது, தமிழைக் கொச்சைப் படுத்திச் சமஸ்கிருதத்தைத் தூக்கிப்பிடிப்பது போன்ற காரியங்களைச் செய்வதால்தான், கவர்னரின் செயல்பாடுகளைத் தமிழக மக்கள் வெறுக்கிறார்கள்.

எந்த வகையிலும் தமிழகத்துக்குப் பயன்படாத கவர்னர் தேவையில்லை என்ற நிலை விரைவில் வரட்டும். இதனால் தான் எங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக, கவர்னர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் நாங்கள் கலந்து கொள்வதில்லை. அவர் மத்திய அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியாகச் செயல்படுவதைத் தான் தமிழக அரசு கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com