பிரதமரின் இன்றைய “மனதின் குரல்” நிகழ்ச்சி, தமிழக மக்களுக்கான இனிய செய்தி! - நயினார் நாகேந்திரன்

தமிழ்ப் பண்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பிரதமர் மோடி எடுத்துக் கூறியதைக் கண்டு வியந்து போனதாக நயினார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இம்மாத “மனதின் குரல்” நிகழ்ச்சியான 130-வது அத்தியாயத்தில், தமிழகத்தின் விவசாய நலன், மகளிர் ஆற்றல், நகர்ப்புற வளர்ச்சி, தமிழ்ப் பண்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பற்றி நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் எடுத்துக் கூறியதைக் கண்டு வியந்து போனேன்.
கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் பெரிய கல்வராயன் சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் 800-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் சிறுதானியப் புரட்சிக்குத் தலைமை தாங்குவதையும், விவசாயம் முதல் நேரடி சந்தை விற்பனை வரை வேளாண் வணிகத்தில் சிறந்து விளங்குவதையும் பெருமிதத்துடன் பாராட்டினார் நமது பிரதமர்.
அடுத்ததாக, குப்பைக் கிடங்குக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் முனைப்புடன் செயல்படும் சென்னை இளைஞர்களைப் பாராட்டியதுடன், நமது நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு இப்படிப்பட்ட பசுமைப் போராளிகளுடன் நாமும் இணைந்து பாடுபட வேண்டுமென மக்களுக்கு அழைப்பு விடுத்தார் நமது பிரதமர்.
பின்பு, மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பாடங்கள் கற்பிக்கப்படுவதை எண்ணியும், நமது கலாச்சாரப் பண்பாட்டை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் பெரும்பங்காற்றும் புலம்பெயர் தமிழர்களைக் கண்டும் மகிழ்ந்து பேசினார் நமது பிரதமர்.
இவ்வாறு, தமிழகத்தின் மூலை முடுக்குகளில் நடக்கும் நல்ல விஷயங்களைக் கூட தெளிவாகக் கண்டறிந்து எவ்வித பாகுபாடுமின்றி அவற்றைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உண்மையிலேயே ஒரு வியத்தகு மகான்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






