மாநில அரசு கோரிய 22 சதவீதத்தை அனுமதித்து நெல் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்: மு.வீரபாண்டியன்

தொடர் மழையால் விளைந்த நெற்பயிர்கள் சரிந்து, மழை நீரில் மூழ்கி கிடக்கிறது என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்
சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நிலவிய சாதகமான சூழலில், குறுவை சாகுபடி பரப்பளவு வழக்கத்தை விட கூடுதலாக சுமார் 6 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. நெல் விளைச்சலும் வழக்கத்தை விட அதிக அளவில் விளைந்திருந்தது. விவசாயிகள் அறுவடை தொடங்கிய நிலையில், வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தொடர் மழையாக பெய்து வருவதால் இயற்கை பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் தான் இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் நெல்லின் ஈரப்பதத்தின் அளவை நிர்ணயிக்கும் அதிகாரமும் ஒன்றிய அரசு வசமே இருந்து வருகிறது.
கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் தொடர் மழையால் விளைந்த நெற்பயிர்கள் சரிந்து, மழை நீரில் மூழ்கி கிடக்கிறது. சாலைகளில் கொட்டி, மூடிப்பாதுகாத்து வரும் நெல் குவியல் முளைவிட்டு வருகின்றன. நேரடிக் கொள்முதல் மையங்களில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மீது மழைச்சாரல் விழுந்து, அதில் நெற்கள் முளைத்து வருகின்றன. மேலும் ஒரு வார காலம் தொடர் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு அறிக்கை எச்சரித்து வருகிறது.
இந்த நிலையில் ஒன்றிய அரசு, நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மூன்று குழுக்களை அமைத்திருப்பது “உள்ளங்கை நெல்லிக் கனியாக” தெரியும் உண்மையை, உருப்பெருக்கிக் காட்டும் கண்ணாடி கொண்டு பார்க்கும் முயற்சியாகும்.
இதனைத் தவிர்த்து, மாநில அரசு கோரியுள்ள 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் முழுவதும் விரைந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
நுகர்பொருள் வாணிபக் கழகம், இந்திய உணவுக் கழகத்துக்காக கொள்முதல் செய்து வரும் நெல்லை அரிசியாக்கி, பொது விநியோகத்துக்கு அனுப்பும் போது, செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து அனுப்ப வேண்டும் என்பது ஒன்றிய அரசின் விதியாகும். இதற்கான முறையில் செறிவூட்டப்பட்ட அரிசியை ஒன்றிய உணவுத்துறை பரிசோதனைக்கு அனுப்பி விட்டு, அதன் அனுமதிக்கு காத்திருக்கும் நிலைக்கு நுகர்பொருள் வாணிபக் கழகம் தள்ளப்படுகிறது. இதன் காரணமாக கொள்முதல் நடவடிக்கைகள் தேக்கமடைகிறது. இந்த உண்மை நிலைகளை மறைத்து விட்டு, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், ஒன்றிய அரசின் இணை மந்திரி எல். முருகனும் பாஜக அரசின் வஞ்சக செயலை மறைக்கும் மலிவான அரசியலில் ஈடுபட்டு வருவதை கைவிட்டு மாநில அரசு கோரியுள்ள 22 சதவிகித ஈரப்பதம் வரை உள்ள நெல் முழுவதையும் உடனடியாக கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி வழங்க நிர்பந்திக்க வேண்டும். என தெரிவித்துள்ளார் .






