தமிழக சட்டசபை ஜனவரி முதல் வாரம் கூடுகிறது: பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட்டுக்கு பிறகு பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறும்.
சென்னை,
தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் முதல் முறையாக கூடும்போது, அதில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், 2026 புத்தாண்டு முதல் வாரத்தில் தமிழக சட்டசபை கூட இருக்கிறது. அனேகமாக, ஜனவரி 5-ந் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார்.
அதனைத் தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 3 நாட்கள் வரை நடைபெறும். அதன்பிறகு, மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும்.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கட்சி ஜூன் மாதம் பட்ஜெட்டை முழுமையாக தாக்கல் செய்யும். வழக்கமாக பிப்ரவரி மாதம் 1-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதாவது பிப்ரவரி 2-வது வாரத்தில் தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இது இடைக்கால பட்ஜெட் என்றாலும், தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட இருப்பதால் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டுக்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் இடைக்காலமாக தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. ஒரு வேளை, பட்ஜெட்டுடன் சேர்த்து வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பட்ஜெட்டுக்கு பிறகு பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறும். 4 நாட்கள் இது நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாத இறுதியில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், அதற்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவிடும்.






