திருப்பரங்குன்றம் விவகாரம்: மோகன் பகவத் கருத்துக்கு இந்திய கம்யூ. கட்சி கண்டனம்

கோப்புப்படம்
நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் அதிகாரக் குரலில் மோகன் பகவத் பேசியிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பதாக மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நாட்டின் எந்த சட்டத்திற்கும் உட்படாத ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவில் பேசிய, அதன் தேசியத் தலைவர் மோகன் பகவத் “திருப்பரங்குன்றம் பிரச்சினை இந்துக்களுக்கு சாதகமாக தீர்க்கப்பட வேண்டும்” என பொது வெளியில் அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடும் அதிகாரக் குரலில் பேசியிருப்பதையும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழகத்தில் இந்துக்களின் எழுச்சியே போதுமானது, அதனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தால், அது செய்யப்படும் எனக் கூறி, மதரீதியாக மக்களிடம் வெறுப்பை விதைத்து, மோதலை தூண்டி விடும் முறையில் பேசியிருப்பதையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது.
இதே போல், “நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் தொடர்ந்து அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருவதால், அவரை பதவி விலக்கம் செய்ய வேண்டும்” என நாடாளுமன்ற விதிமுறைகளை பின்பற்றியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ள, அரசியலமைப்பு சார்ந்த உரிமையின்படியும் மக்களவைத் தலைவரிடம் மனு கொடுத்துள்ளனர். இதில் தலையிட்டு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு, எதிர்கட்சிகளின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளது.
சட்டத்துக்கு உட்படாமலும், ஆவண சாட்சியங்களை பார்க்காமலும், நூறாண்டுகளுக்கும் மேலான நடைமுறை வழக்கங்கள், வழக்காறுகளையும் கருத்தில் கொள்ளாமல், திருப்பரங்குன்றத்தின் தீபம் ஏற்றும் நிகழ்வு தொடர்பாக சமூக பதற்றத்தை உருவாக்கும் தீர்ப்பை வழங்கி, வகுப்புவாத சக்திகளின் மலிவான அரசியலுக்கு துணைபோன ஜி.ஆர்.சுவாமிநாதனை பாதுகாக்க சங் பரிவார் கும்பல் தீவிரமாக செயல்படுவதை எச்சரிக்கையாக அணுகி, பிளவு வாத சக்திகளை நிராகரிக்க வேண்டும் என இறையியலாளர்களையும், பொதுமக்களையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






