திருப்பரங்குன்றம் விவகாரம்: இந்து முன்னணி மாநிலத் தலைவர் கைது


திருப்பரங்குன்றம் விவகாரம்:   இந்து முன்னணி மாநிலத் தலைவர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2025 1:01 PM IST (Updated: 4 Feb 2025 1:54 PM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர்,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் மலையை பாதுகாப்போம் என்று இந்து அமைப்பினர் ஒன்று கூடி இன்று போராட்டம் நடத்தப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதலே மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்து, திருப்பரங்குன்றம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி தொண்டர்கள் திடீரென தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தின் போது இந்து முன்னணி தொண்டர் ஒருவர் திடீரென பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பலத்த பாதுகாப்பு

இந்து முன்னணி அறிவித்த அறப்போராட்டத்தில் தென் மாவட்ட இந்து அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்க முடியாத வகையில் அவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளனர். தடையை மீறி வாகனங்களில் வந்தால் அவற்றை பறிமுதல் செய்வதுடன், கைதும் செய்யப்படுவர் என போலீசார் எச்சரித்துள்ளனர். மலையைச் சுற்றி, 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து எஸ்.பி.,க்கள், மூன்று ஏ.டி.எஸ்.பி.,க்கள், 13 டி.எஸ்.பி.,க்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தலைமையில், 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடஉள்ளனர். திருப்பரங்குன்றத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் சுற்று வட்டார பகுதியில் உணவகங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story